ஏதோ ஹேக்கர்கள் செய்த வேலைக்கா கூகிள் வெளியேறுகிறது? என்ற சந்தேகம் ஏற்கனவே இருந்தது. இப்போது அந்த சந்தேகம் தெளிவாகி வருகிறது. சீன அரசே இது போன்ற ஹேக்கிங் வேலைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பி செய்திகள் வர துவங்கி உள்ளன. பல நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் களவாடப்பட்டு இருக்கலாமோ? என்ற அச்சம் உலக நாடுகளிடையே பரவ தொடங்கி இருக்கிறது.
கூகுளின் சேவையான ஜிமெயில் உபயோகித்த மனித உரிமை ஆர்வலர்களின் தகவல்கள் திருடப்பட்டன என்று கூகிள் தெரிவித்து இருந்தது. இது பழைய செய்தி. இப்போது இந்த திருட்டு வேலையில் கூகிள் சீன அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் உதவி இருக்கலாம் என்று Reuters செய்தி வெளியிட்டு உள்ளது. இது குறித்து கூகுளிடம் கேட்டதற்கு வதந்திகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று கூறி விட்டது. இந்த தாக்குதல்கள் பயனர்கள் கணினியில் மல்வேர்களை (malware) நிறுவி அதன் மூலம் தகவல்கள் திருடப்பட்டதாக கூறுகிறார்கள்.
ஜனவரி 13 -க்கு பிறகு, சீன கூகிள் அலுவலர்கள் கூகிள் இன்டெர்னல் நெட்வொர்க்குகளை அணுக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பல சீன கூகிள் அலுவலர்கள் விடுமுறையில் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், சிலர் சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.
இது குறித்து கூகுளிடம் கேட்டதற்கு உள்ளுக்குள் நடக்கும் அலுவலக நடவடிக்கைகள் பற்றி வெளியே கருத்து தெரிவிப்பதில்லை என்று கூறி உள்ளார்கள். அமெரிக்க அரசு புகுந்து சீனாவிடம் விளக்கம் கேட்கும் அளவிற்கு பிரச்சினை நடந்திருக்கிறது என்றால், என்னமோ நடந்திருக்கு! நடந்துகிட்டிருக்கு!! மர்மமா இருக்குது!!. கூகிள் இன்னும் சில தினங்களில் சீன அரசுடன் பேச போவதாக அறிவித்து உள்ளார்கள்.
இந்த கூகிள் மீதான தாக்குதலுக்கு 'ஆபரேசன் அரோரா' (Operation Aurora) என்று பெயரிட்டு உள்ளார்கள். மைக்ரோசாப்ட்டின் இணைய உலாவி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் உள்ள பாதுகாப்பு ஓட்டையே இந்த தாக்குதலுக்கு பயன்பட்டதாக Macafee இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது. இது தகவல்கள் திருடப்பட வாய்ப்பாக அமைந்ததாகவும் கூறி உள்ளது. பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் அரசுகள் மக்களை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளன.
ஜிமெயில் போலவே யாஹூ உள்பட பல நிறுவனங்களின் மின்னஞ்சல் சேவைகள் இந்த தாக்குதலில் பாதிக்க பட்டிருக்கலாம். கூகிள் இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருவதாக கூறுகிறது. இந்த தாக்குதலின் பல விசயங்களை வெளியிடாமல் கூகிள் மௌனம் காத்து வருவது உண்மை. அவை கூகுளுக்கும், அமெரிக்க அரசுக்குமே வெளிச்சம்.
நம்மூர் செய்திக்கு வருவோம். சீனா இந்திய கணினிகளை தாக்க முயன்றதாக இந்திய பாதுகாப்பு செயலர் நாராயணன் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார். தனது அலுவலகம், அரசு நிறுவன கணினிகள் டிசம்பர் 15 அன்று தாக்குதலுக்கு உள்ளானதாக கூறுகிறார். இது போன்று சைபர் தாக்குதல் நடப்பது முதல் முறை அல்ல என்கிறார்.
PDF ஆவணம் ஒன்று டிராஜனுடன்(trojan) இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி இந்த தாக்குதல் நிகழ்த்தப் பட்டதாக கூறுகிறார். இது சீனாவில் இருந்ததுதான் வந்தது என்றும், துல்லியமாக எந்த இடத்தில் இருந்து வந்தது என்று கண்டறிவது கடினம் என்றும் கூறியுள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு சீனா இந்திய ராணுவ கணினிகளை தாக்கி பல தகவல்களை திருடியது என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம். அமெரிக்காவின் பாதுகாப்பு துறை கணினிகள் சீனாவிலிருந்து அதிக தாக்குதலுக்கு உள்ளாகின என்ற குற்றசாட்டும் ஏற்கனவே உண்டு. இணையத்தில் சீனர்களின் அத்துமீறல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்து இருக்கின்றன.
இந்நிலையில் சீனாவில் கூகுளின் போட்டியாளரான தேடல் தளம் Baidu.cn தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டு நான்கு மணி நேரங்கள் செயலிழந்து போனது. 'இரானியன் சைபர் ஆர்மி' என்ற பெயரில் சிலர் இந்த தாக்குதலை செய்ததாக கூறி கொள்ளுகிறார்கள். இவர்கள்தான் ஒரு மாதத்திற்கு முன்பு ட்விட்டர் தளத்தையும் தாக்கியவர்கள். இது குறித்த வீடியோ செய்தி இங்கே.
அவ்வப்போது சீனா மீது சைபர் தாக்குதல் தொடர்பான புகார்கள் வந்திருந்தாலும், இந்த முறை கூகிள் எழுப்பி உள்ளதால் இது உற்று நோக்கப்படுகிறது. உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் சக்தியாகவே சீனா மாறி வருகிறது. உலக நாடுகள் இந்த விசயத்தில் ஒரு கண்டிப்பான முடிவை எடுத்து, இந்த பூனைக்கு மணி கட்ட வேண்டிய நேரம் இது.
இந்த புகார்களுக்கு சீனாவிடம் கேட்டால், "ஹேக்கிங் வேலை எந்த வடிவில் இருந்தாலும், சீனாவில் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது." என்ற பதில் வருகிறது.
நல்ல பதில்!
0 comments:
Post a Comment