பதிவர்களை பங்களிக்க வரவேற்கும் ராடான் நிறுவனம்

நன்றாக நினைவிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு  வீட்டில் உள்ள இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கு மதியக்காட்சி சினிமாவுக்கு செல்வதுதான். அதுவும் ராமராஜன் படம் என்றால் பறப்பார்கள். படம் பார்த்துவிட்டு வந்து சாயந்திரம் லைன் வீடுகளில் உள்ளோர் அவரவர் வீட்டு வாசல்களில் குழுமி படத்தை பற்றி அளவளாவுவதை ஒரு கடமையாகவே வைத்து இருந்தனர்.

அடுத்ததாக தொலைக்காட்சி வீட்டுக்குள் நுழைந்தது. மதியம் தூர்தர்சனில் சாந்தி என்று ஒரு தொடர் போடுவார்கள். மதிய சினிமா மறந்து போனது. சாந்தி பார்த்து விட்டு சாயந்திர அரட்டை அத்தொடர் பற்றி அமைந்தது.

அடுத்ததாக கேபிள் டிவி வீட்டுக்குள் வந்தது. மதியம் புத்தம் புதிய படங்களாக போட்டு அசத்துவார்கள். இல்லத்தரசிகள் மதிய காட்சி சினிமாக்களுக்கு போவது முற்றிலும் குறைந்து போனது. வழக்கம் போல் சாயந்திர அரட்டை.


சன் டிவி வந்தது. ஆரம்பத்தில் அதிகம் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளே வந்தன. இந்த இல்லத்தரசிகளின் மார்க்கெட்டை பிடிக்க பல்வேறு நெடுந்தொடர்களை ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் இந்த மார்க்கெட்டை கைப்பற்றி சன் டிவி நெடுந்தொடர்களுக்கு ஒரு மவுசை ஏற்படுத்தி கொடுத்தவர் நடிகை ராதிகா சரத்குமார். இவரது சித்தி நெடுந்தொடர் மாபெரும் வெற்றி என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

அந்த காலகட்டத்தில் பெண்கள் மத்தியில் பெரிய டாக் சித்தி தொடரின் தினசரி கதைகள்தான். இல்லத்தரசிகள் சமைப்பதை மறந்து தொலைக்காட்சிக்கு அடிமை ஆனது சித்தி தொடருக்கு பிறகுதான். அனைத்து தொலைகாட்சி சேனல்களும் நெடுந்தொடர்களை போட்டு தாக்க துவங்கினர். சினிமா நிகழ்ச்சிகள் குறைந்து தொலைகாட்சி என்றால் நெடுந்தொடர்தான் என்று மாறிப்போனது. அது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நெடுந்தொடர்களை வெறுப்பவர்கள் கூட ராடான் நிறுவனத்தின் தொடர்களை விரும்பி பார்த்தனர். நடிகை ராதிகாவாக இருந்தவர் சிறந்த தொழிலதிபர் ராதிகாவாக மாறியது இந்த காலகட்டம்தான். அவரது ராடான் மீடியா நிறுவனம் பல வெற்றிகளை பெற்றது. அடுத்து ராடான் மீடியா திரைத்துறையில் நுழைந்தார்கள். தொலைக்காட்சி துறையில் பெற்ற அளவிற்கு வெற்றிகள், திரைத்துறையில் பெற முடியவில்லை. தற்போது அவர்களது ஜக்குபாய் திரைப்படம் கூட சிக்கலில் தவிக்கிறது.

தொலைக்காட்சி துறையில் புதிதாக நுழையும் நடிகர்கள், டெக்னிசியன்கள் சிறப்பாக செயல்படும் போது அவர்களை கண்டு தனது தொடர்களில் வாய்ப்பு தந்து அவர்களை மெருகேற்றுவது ராடான் நிறுவனத்தின் வழக்கம். இன்று பிரபலமாக உள்ள பலர் ராடான் நிறுவன தொடர்களில் பங்களித்த பின்பு அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படி மக்கள் மனதறிந்து நிகழ்ச்சிகளை வழங்கி வரும், திறமையாளர்களை கண்டு கொண்டு ஊக்கமளித்து வரும் ராடான் நிறுவனம், இப்போது இணைய துறையிலும் கால்பதிக்க துவங்கி உள்ளார்கள் (அப்பாடா! ஒரு வழியாக விசயத்துக்கு வந்து விட்டேன்). தொலைக்காட்சி துறையில் எப்படி பெண்களை குறி வைத்து நிகழ்ச்சிகளை வழங்கினார்களோ அது போன்று இங்கே வலைப்பதிவர்களை குறிவைத்து ஒரு சேவையை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.



அவர்களது இணையதளத்தின் 'கிரியேட்டிவ் கார்னர்' என்ற பகுதியில் வலைப்பதிவர்களின் படைப்புகளை தேர்ந்தெடுத்து பட்டியலிட போவதாக அறிவித்து உள்ளனர். திறமையான எழுத்தாற்றல் உடையவர்களுக்கு அவர்களது நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் வழங்க போவதாக அறிவித்து உள்ளனர்.

இது போன்ற பெரிய நிறுவனங்கள் இணைய துறையில் கால் வைப்பது வரவேற்கத்தக்க ஒன்று. இதன் மூலம் இணையத்தில் தமிழ் மேன்மேலும் பெருகும். தற்சமயம் அவர்கள் இது குறித்து வேறு எங்கும் விளம்பர படுத்தி இருப்பதாக தெரியவில்லை. வரவேற்பை பொறுத்து விளம்பர படுத்துவார்கள் என்று நம்புவோம்.

தங்கள் படைப்புகளை பகிர விரும்புவோர் ராடான் இணையதளத்தின் இந்த முகவரிக்கு சென்று உறுப்பினர் கணக்கு துவக்கி படைப்புகளை பகிருங்கள். அந்த இணைய பக்கம் வெற்று இணைய பக்கமாகவே உள்ளது. பதிவர்கள் எவரும் அறிந்திருக்க வில்லை என்று நினைக்கிறேன்.

சுட்டிகள்
ராடான் மீடியாவின் இணையதளம் 
கிரியேடிவ் கார்னர் குறித்து ராடான் மீடியாவின் வலைப்பூவில் அறிவிப்பு 
ராடன் மீடியாவின் கிரியேடிவ் கார்னர்


தொடர்புடைய இடுகைகள்

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

6 comments:

ரவி said...

அவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை குழந்தை கூட புரிந்துகொள்ளும்.

விரைவில் வரவிருக்கும் ஜக்குபாய் படத்தை நார் நாராக கிழித்து தொங்கவிட பதிவர்கள் தயாராகிவிட்ட நிலையில், இப்படியொரு அறிவிப்பு.

எங்களையெல்லாம் பார்த்தா காமெடியா தெரியுதா ??

சொம்பு said...

டிவிஎஸ் ஐம்பது எப்போதிலிருந்து சொம்பு தூக்கி ஆனீர்கள்? எதையும் எழுதுவதற்கு முன்பு பின்புறம் உள்ள அரசியலை ஆராய்ந்து எழுதுங்கள்.

சொம்பு said...

நீங்கள் கூறுவது போன்று ராடான் மீடியா மிகப் பெரிய நிறுவனம் தான். பெரிய நிறுவனம் தன்னுடைய ப்ரோடக்ட்டை பின்னூட்டங்களில் தான் விளம்பரம் செய்ய வேண்டுமா? அவர்களுடைய இணைய பக்கம் அவசர கதியில் துவக்கப்பட்டது போன்று தெரியவில்லையா? பதிவர் ராதாகிருஷ்ணனின் http://tvrk.blogspot.com/2010/01/blog-post_12.html இந்த பதிவையும் பாருங்கள். காரணம் விளங்கும்.

கிரி said...

ரவி இதில் என்ன காமெடி அவர் தன்னோட கருத்தை கூறினார்! அவர் இதை எல்லாம் மனதில் வைத்து கூறவில்லை என்பது என் கருத்து..

வழக்கம் போல இதை ஒரு செய்தியாகத்தான் கூறி இருக்கிறார்.. நோ டென்ஷன் :-)

அப்புறம் இவங்க என்ன செய்தாலும் படமே ஒருவேளை!! நன்றாகவே இருந்தாலும்.. பதிவர்கள் விட்டு விடவா போகிறார்கள்.. சும்மா படத்தையே நொக்கி எடுப்பார்கள்.. இதன் நிலைமை பரிதாபம் தான்..

சரத்திற்கு நேரம் சரி இல்லை போல ! :-(

டிவிஎஸ்50 said...

வருகைக்கு நன்றி செந்தழல், கிரி, சொம்பு

தொடர்ந்து இனையத்தில் பதிவர்களுக்கு இணையத்தில் உதவும் சேவைகள் பற்றி எழுதி வந்திருக்கிறேன். இந்த பதிவு தமிழுக்கு வந்த ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தும் விதமாகவே எழுதப்பட்டது.

ஸாதிகா said...

வாழ்த்துக்கள்!